தமிழ் பாடலாக இசை வடிவம் பெறுகிறது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எழுதிய கவிதை

இந்திய – சீனா நாடுகளின் தலைவர்களின் முறைசாரா சந்திப்பு மாநாடு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடந்தது. இந்தியா, சீனாவின் இருதரப்பு உறவுகளில் இருக்கும் வரலாற்று ரீதியிலான உறவுகளை பிரதிபலிப்பதாகவே இந்த மாமல்லபுர சந்திப்பு  இருந்தது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பாரதப் பிரதமர் அவர்கள் சீன அதிபருடன் நடந்த சந்திப்பில் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்திருந்தார். இந்த நிகழ்வானது உலகமே தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை பற்றி பேசும் படியாக அமைந்தது.

தமிழர்கள் அணிகின்ற உடையில் பல்வேறு நாகரீக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிற இந்த வேளையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை உலகமே அறிய வைத்தது. இதன்மலம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டார்.

சீனா அதிபர் ஜீ ஜின்பிங் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பை வெகுவாக பாராட்டியதும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கியது.

சில,  நாட்களுக்கு முன்பு நரேந்திர மோடி இந்த பயணத்தை குறித்த அனுபவங்களை இந்தி மொழியில் கவிதையாய் வடித்து ட்விட்டரில் பதிவு செய்தார். அக்கவிதையில், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கடல் உடனான உரையாடலில் – தன்னையே தொலைத்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட பொழுது கடற்கரை யோடு தனிமையில் உரையாடிய இனிய அனுபவமாக இந்த கவிதை அமைந்திருக்கிறது. 

உலகின் பல நாடுகளுக்கும் அந்த நாடுகளில் உள்ள உன்னதமான இயற்கை எழில் நிறைந்த இடங்களுக்கெல்லாம் சென்று இருந்தாலும்கூட தமிழகத்திலுள்ள மாமல்லபுரம் கடற்கரையின் அழகு அவரது மனதை கொள்ளை கொண்டது என்றால் அது மிகையல்ல. 


 ஹிந்தியில் எழுதப்பட்ட பாரதப்பிரதமர் அவர்களின் கவிதை இந்தியாவின் தமிழ் தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இந்திய மக்களின் மனம் கவர்ந்த கவிதையாக அமைந்தது. 

இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்ற அந்த கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கு இசை வடிவம் கொடுத்து பாடலாக அமைக்க தமிழ் திரையுலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் திரு பாமரன் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டார். 

தமிழக பாரதிய ஜனதா தென் சென்னை மாவட்ட தலைவர் திரு டால்ஃபின் ஸ்ரீதர் அவர்கள் இந்த பாடலின் தயாரிப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். திரு டால்பின் ஸ்ரீதர் அவர்கள் இந்திய அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு கொள்கைக்கு ஏற்ப தனது சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக துணிப் பையை வாங்கிக் கொடுத்து பிளாஸ்டிக் ஒழிப்பு புரட்சியை மக்களிடையே கொண்டு சென்றவர்.

மேலும் மத்திய பாஜக அரசின் தூய்மை இந்தியா திட்டம் உட்பட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தங்கள் பகுதி மக்களோடு இணைந்து செயல்படுத்தி வருபவர்.

பிரபல பின்னணி பாடகர்கள் திரு பிரபாகரன் மற்றும் திருமதி அம்ருதா அவர்களின் குரலில் பாடல் மிகவும் இனிமையாக அமைக்கப்பட்டிருக்கிறது. 

இந்தப் பாடலுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசைக் கலைஞர்களில் ஒருவரான திரு பாலாஜி அவர்கள் கீபோர்ட் வாசிக்கும் பொறுப்பை ஏற்று சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார். 

மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி இசைக் கலைஞர்கள் பலரும் இசையமைப்பாளர் திரு பாமரன் அவர்களின் மெட்டுக்கு இசைக்கருவிகளை வாசித்து பாடலுக்கு அழகு கூட்டியுள்ளனர்.

இந்தப்பாடல் தயாரிப்பின் ஒருங்கிணைப்பு பணியை கவிஞர் ரக்சகன் அவர்கள் ஏற்றுக்கொள்ள பாடலின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் இந்த பாடலுக்கான வெளியீடு தமிழக அளவில் இந்திய அளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: