தமிழகத்தின் அறிவார்ந்த ஆளுமைகள் – திரு.இரா.திருநாவுக்கரசு.IPS

சிறப்புக் கட்டுரை. கவிஞர் ரக்சகன்

தமிழகத்தின் அறிவார்ந்த ஆளுமைகள் வரிசையில் நாம் காணவிருப்பது தமிழக காவல் துறையைச் சார்ந்த மதிப்பிற்குரிய திரு இரா.திருநாவுக்கரசு ஐபிஎஸ் அவர்கள்.

சமீபத்தில் காவலன் செயலி விழிப்புணர்வுப் பாடல் தொடர்பாக இசையமைப்பாளர் பாமரன் அவர்களோடு ஆணையர் அலுவலகத்தில் மதிப்பிற்குரிய திருநாவுக்கரசு ஐபிஎஸ் அவர்களை சந்தித்தேன்.

அந்த நிகழ்வன்று அவரது அலுவலக முகப்பில் ஒரு வெள்ளைப் பலகையை கவனிக்க நேர்ந்தது. அதில் ஒரு திருக்குறளும் அந்தத் திருக்குறளைச் சார்ந்த ஒரு ஓவியமும் வரையப்பட்டு இருந்தது. 

ஓய்வுக்கு நேரமின்றி எப்பொழுதுமே பரபரப்பாகவே காணப்படும் ஆணையர் அலுவலகத்தில் திருக்குறளைப் படிக்க நேர்ந்தது என்னை மிகவும் வியக்க வைப்பதாக இருந்தது. எனவே அதைப் பற்றிய மேலதிக செய்தியை அறிந்து கொள்ள முனைந்த பொழுது பல அரிய தகவல்கள் அறிய முடிந்தது.


தனது இடையறாத காவல்துறைப் பணிகளுக்கு இடையில் திருநாவுக்கரசு.IPS. அவர்கள் திருக்குறளின் பெருமைகளையும் அதன் ஒப்பற்ற கருத்துக்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்காக நல் முயற்சி எடுத்து வருவதை அறிய முடிந்தது.

அந்தவகையில் திருநாவுக்கரசு IPS. அவர்கள் திருக்குறள் சார்ந்த சில  புத்தகங்களையும் எழுதியுள்ளார். 

விஜயா பதிப்பகம் வெளியிட்ட ‘ திருக்குறளோடு நாம் 105 குறல் கதை பொருள்’  மற்றும் ‘உன்னுள் யுத்தம் செய்’ என்ற நூல்களையும், குமரன் பதிப்பகம் வெளியிட்ட ‘குறல் கதை விருந்து’ மற்றும் ‘குறல் கதை இனிது’ என்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

சமீபத்தில் சமூகவலைத்தள பகிர்வில் அவருடைய ஒரு காணொளியை காண நேர்ந்தது. அதில் திருக்குறள் சார்ந்த ஒரு கதையும் அதன் பொருளும் இடம்பெற்றிருந்தது. 

அதிகாரம் – பெரியாரைத் துணைக்கோடல் குரல் – 441.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.

இந்தக் குறலுக்கு விளக்கமாக அவர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான கதையை சொல்லியிருக்கிறார்.

சத்ரபதி சிவாஜி அவர்களின் குருநாதர் இராமதாசர் அவர்கள் பிச்சை எடுத்துக்கொண்டு அரண்மனை வழியாக வருவதையும், அதை அறிந்த சத்ரபதி சிவாஜி அவர்கள் அவருக்கு தான் வெற்றி வாகை சூடி அடைந்த அனைத்து நாடுகளையும் எழுதிக் கொடுப்பதையும் பின்பு அதை இராமதாசர் மறுப்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது குருநாதருக்கு சத்ரபதி சிவாஜி அவர்கள் பிச்சை எடுத்துக் கொடுப்பதையும் சுவாரசியமாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில் இடம்பெற்றிருந்த இந்தப் பொருளும் கதையும் இன்றைய குழந்தைகளும் சிறுவர்களும் இளைஞர்களும் எளிமையாக புரிந்துகொள்ளும் வண்ணம் இருந்தது.

இது போன்ற புத்தகங்களும் காணொளிப் பதிவுகளும் தான் இன்றைய அறிவியல் உலக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

எனவே மாணவர்களும் பெற்றோர்களும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் என்று இல்லாமல் இந்த புத்தகங்களையும் காணொளிகளையும் வாய்ப்பை ஏற்படுத்தி படித்து கேட்டு தங்கள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளலாம்.

தன்னுடைய பொறுப்பு மிகுந்த உயர் பதவியின் பெரும் பணிகளுக்கு இடையில் திருநாவுக்கரசு ஐபிஎஸ் அவர்களின் எழுத்தும் பேச்சும் இன்றைய இளைஞர்களுக்கு உந்து சக்தியாகவும் காந்த சக்தியாகவும் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: