ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு பிள்ளையார்சுழி போட்ட திராவிடர் கழகம்-சிறப்புக் கட்டுரை
ரஜினிகாந்த் அவர்கள் திரை உலகில் கொடி கட்டிப் பறந்த காலம் முதல்கொண்டு ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி தமிழகத்தில் எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

கடந்த வருடம் தனது ஆன்மீக அரசியலை வெளிப்படையாகவே ரஜினிகாந்த் அறிவித்தார்.
ஆனாலும் கட்சியை தொடங்குவது குறித்த அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் அமைதி காத்து வந்தார்.
ரஜினியின் மௌனம் பொது மக்களிடத்தும், அரசியல் நோக்கர்கள் இடத்தும், ரஜினியின் ரசிகர்கள் இடத்தும் ஒரு விவாதப் பொருளாகவே இருந்து வந்தது.
இதையடுத்து ரஜினிகாந்த் அவர்கள் போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் தயாராக இருங்கள் என்று ரஜினியின் ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்டிருந்தார்.
எனவே ரஜினியின் முறையான அரசியல் அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் ஏன் இந்தியா முழுவதுமே இருந்தது.
ஒவ்வொரு முறை தனது பட விழாக்களில் கலந்து கொள்ளும் போதும் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் நிலைப்பாட்டையும், அன்றாட அரசியலைத் தான் கூர்ந்து கவனித்து வருவதையும் இலை மறை காயாக தெரிவித்து வந்திருந்தார்.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் தமிழகத்தில் 1971-இல் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஒரு பேரணியில் இந்து கடவுளான ராமரை அவமதித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் துக்ளக் பத்திரிக்கையில் வந்த இந்த செய்தி மக்களிடையே மிகுந்த விவாதப் பொருளாக அமைந்தது. வீண் சர்ச்சைகளை தடுப்பதற்காக அன்றைய ஆளும் திமுக அரசு அன்றைய துக்ளக் செய்தி பிரதியை தடை செய்திருந்தது.
தடையை மீறி துக்ளக் பத்திரிக்கையை மக்கள் பலமடங்கு விலை கொடுத்து வாங்கிப் படித்தனர் என்ற செய்தியும் நம்மை இன்று வியக்க வைக்கிறது.

அன்று முதல் துக்ளக் பத்திரிக்கை தமிழகத்திலும் இந்திய அளவிலும் பிரபலமானது என்றே சொல்லலாம்.
இந்த செய்தி அன்றைய காலகட்டத்தில் தினத்தந்தி, தினமலர் உட்பட மேலும் பல பத்திரிக்கையிலும் வந்தது.
திராவிடர் கழகம் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனால் நீதிமன்றத்தில் ஒரு சில பத்திரிக்கைகள் வருத்தமும் தெரிவித்தன.

இந்நிலையில்தான் ரஜினியின் பேச்சு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஜினியின் பேச்சை திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் உட்பட மேலும் பெரியார் ஆதரவாளர்கள் நேரடியாக கடுமையாக கண்டித்தனர்.
அதிமுக உட்பட சில கட்சிகள் ரஜினிக்கு அறிவுரை என்ற வகையிலே கண்டனம் தெரிவித்து இருந்தது.
இரண்டு நாட்களாகவே தமிழகம் முழுவதும் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளில் ரஜினியின் பேச்சு தொடர்பான விவாதமே நடைபெற்று தமிழக அளவிலும் இந்திய அளவிலும் டிஆர்பியை எகிறச் செய்தது.
ரஜினியின் இந்த பேச்சு தொடர்பான விவாத நிகழ்ச்சிகளில் திராவிடர் கழகத்திற்கும் ரஜினி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாதங்கள் எழுந்தன.

மேலும் உடனடியாக பேட்டி அளித்த ரஜினி தான் பத்திரிகை செய்தி அடிப்படையில்தான் பேசினேன். ஆதாரம் இன்றி பேசவில்லை. எனவே மன்னிப்பு கேட்க முடியாது என்று தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன் என்றார். இந்தப் பேச்சுதான் இன்றுவரை இருந்த ரஜினியை உலகுக்கு மாறுபடுத்திக் காண்பித்தது. கருத்தில் உறுதி, பேச்சில் தெளிவு, மேலும் ரஜினியின் நீண்ட நெடிய அரசியல் சமுதாயக் கண்ணோட்டத்தை தமிழக மக்கள் காண முடிந்தது.
விவாத நிகழ்ச்சிகளில் ரஜினியின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எந்த அளவில் இருந்தனவோ அதே அளவில் ரஜினியின் அரசியல் நுழைவு என்பது பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகிவிட்டது.

ரஜினியின் ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்று கேள்வி கேட்ட அரசியல் நோக்கர்களிடத்தும், பொதுமக்களிடத்தும் இதுதான் ரஜினியின் அரசியல் என்று தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது.
பொட்டில் அடித்தாற்போல் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பது தமிழக மக்களுக்கு புரிந்து விட்டது.
இந்த ஆன்மீக அரசியலுக்கான புரிதலை ரஜினி கட்சி ஆரம்பித்து விட்டு ஒவ்வோர் மாவட்டத்திற்கும் சென்று பொதுக்கூட்டம் நடத்தி மிகப்பெரிய மெனக்கெடலுக்கு பின்பு மக்களிடையே சேர்ப்பிக்க வேண்டிய செய்தியை திராவிடர் கழகம் இலவசமாக ரஜினிகாந்துக்கு செய்து கொடுத்து விட்டது.

ரஜினி அரசியலுக்கான தனது மிகப்பெரிய வியூகத்தை மனதில் வைத்து இருப்பாரேயானால் அந்த வியூகத்தின் ஆரம்பப்புள்ளியாக தனது துக்ளக் விழாவின் பேச்சை ரஜினி பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதாவது ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்த பெருமை திராவிடர் கழகத்தை சேர்ந்தது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இன்றைய திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் உட்பட அனைத்து திராவிட கட்சிகளுக்கும் தாய்வீடு என்றால் அது தந்தை பெரியாரின் திராவிட கழகம் தான்.
தந்தை பெரியார் தமிழகம் மட்டுமன்றி இந்திய அளவிலேயே சாதிக் கொடுமையை எதிர்த்து போராடி அதற்கான வெற்றியும் மனிதகுலத்திற்கு பெற்றுத் தந்தவர்.

இன்றைய காலகட்டத்தில் சாதி மத பேதமின்றி அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர் வேலைவாய்ப்புகள் என்ற கனவு நனவானது என்ற உண்மைக்கு தந்தை பெரியாரின் பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது என்பதை ரஜினிகாந்த் அவர்களும் அவரது ரசிகர்களும் படித்து ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அதைப் படித்துத் தெரிந்து கொள்ளாமல் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் செய்ய முடியாது.
காரணம் ரஜினி இருக்கும் அரசியல் களம் திராவிடக் கட்சிகள் கோலோச்சிக் கொண்டிருக்கும் களம். அந்தக் களத்திற்கு விதை போட்டவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் புகழுக்கு களங்கம் என்றால் கட்சி பேதமின்றி இன்றைய திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட கழகமும் இன்ன பிற திராவிட கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்குரல் எழுப்பும் என்பதை இன்றைய நிகழ்வுகள் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு காட்டிவிட்டன.
ரஜினிகாந்த் அவர்களின் ஒவ்வொரு பேச்சையும் தமிழக அரசியல் களமும் இந்திய அரசியல் களமும் கூர்ந்து கவனிக்கும் என்பதே உண்மை. கண்டிப்பாக அதை ரஜினிகாந்த் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவார்.
ரஜினி ஸ்டைலில் சொல்லப் போனால் “ஆண்டவன் சொல்லிவிட்டான், அருணாச்சலம் முடிக்கப் போறான்” என்றே சொல்லலாம்.

ரஜினிகாந்த் ரசிகர்கள் கூட தங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளையும் மிகுந்த கவனத்துடன் நடத்தவேண்டும். அதுவே ரஜினி அரசியலுக்கான சரியான பாதையாக அமையும்.