பொன்மகள் வந்தாள் திரைவிமர்சனம் | Ponmagal vanthal review
பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் உள்ள இரண்டு சிறப்பம்சம் என்ன என்பதை தெரிந்து கொண்டு திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் முதல் சிறப்பம்சம் அதன் கதைக்கரு. பாலியல் வன்கொடுமையை கதைக் கருவாகக் கொண்டு சமீப காலங்களில் வந்த திரைப்படங்கள் எதுவுமே சோடை போகவில்லை எல்லா திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

பொன்மகள்வந்தாள் திரைப்படத்தின் இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால் இந்தப் படத்தில் ஐந்து மாபெரும் இயக்குனர்கள் நடித்து இருக்கின்றார்கள். அதுவும் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் முதல் படத்தில் இப்படி சினிமா துறையில் சாதனை புரிந்த 5 இயக்குனர்கள் சேர்ந்து நடித்தது இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அந்த வகையில் படத்தின் இயக்குனர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் ஒரு அதிர்ஷ்டக்காரர் என்றே சொல்லலாம்.
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகா பார்த்திபன் பிரதாப்போத்தன் பாக்கியராஜ் பாண்டியராஜன் தியாகராஜன் என்ற மாபெரும் நட்சத்திர கூட்டம் தங்களது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு இந்திய நாட்டை புரட்டிப்போட்ட நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவம் பொது மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு பாலியல் வன்கொடுமை சார்ந்த விழிப்புணர்வு படங்கள் நிறைய வந்து ஹிட்டடித்தன. அந்த வரிசையில் அந்த இன்னும் ஒரு படம்தான் பொன்மகள்வந்தாள் திரைப்படம்.

2004ம் ஆண்டு ஒரு பாலியல் வன்முறை தொடர்பான ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்த திரைப்படம் பின்னப்பட்டிருக்கிறது.

அதாவது பல வருடங்களுக்கு முன்பு ஊட்டியில் 10 வயது குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்த முற்படுகிறார். அந்த குழந்தையை காப்பாற்ற போன இரண்டு இளைஞர்களையும் ஜோதி சுட்டுக் கொன்று விட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த ஜோதி என்கிற குற்றவாளியை போலீஸ் தரப்பில் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் தரப்பிலிருந்து ஜோதி என்கிற அந்த குற்றவாளி ஒரு சைக்கோ என்று பொதுமக்களுக்கு சொல்லப்படுகிறது.
அதன் பின்பு ஜோதி தப்பித்துச் சென்று திருப்பூர் வந்தடைந்து திருப்பூரிலிருந்து ரகசியமாக ஜெய்ப்பூர் செல்ல முற்படுகையில் போலீஸ் கையில் அகப்பட்டுகிறார்.

இந்த நிலையில் ஜோதியை போலீசார் விசாரிக்கும் பொழுது குழந்தைகள் மற்றும் இறந்து போன இளைஞர்களைப் பற்றி கேட்கும்பொழுது ஜோதி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதாகவும் அதற்கு பதிலடியாக போலீசார் ஜோதியை சுட்டதாகவும் அந்த இடத்திலேயே ஜோதி இறந்து விட்டதாகவும் போலீஸ் தரப்பிலிருந்து பத்திரிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் முடிந்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் கழித்து, வெண்பா என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோதிகா இந்த வழக்கை கையில் எடுக்கிறார்.
இந்த வழக்கில் மர்மங்கள் நிறைந்து இருப்பதாக கருதி அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முற்படுகிறார் வெண்பா. இங்குதான் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.

ஜோதிகாவின் அப்பாவாக பெட்டிசன் பெத்துராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் நடித்திருக்கிறார். பெட்டிஷன் பெத்துராஜ் தனது மகள் வெண்பாவின் வழக்கிற்கு ஆதரவாக ஊக்கம் அளிக்கிறார்.
ஒரு பெண் வழக்கறிஞர் பாலியல் வன்கொடுமை வழக்கை கையில் எடுத்து வாதாடுகையில் நீதிமன்றத்திலும் பொது வெளியிலும் என்னவெல்லாம் புது புது அருவெறுக்கத்தக்க நிகழ்வுகள் நடக்கும் என்பதை நேர்த்தியாக இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள்.

வெண்பா பாத்திரத்தை ஏற்று பின் ஜோதிகா துணிச்சலோடு இந்த வழக்கை கையில் எடுக்கிறார். பெரும் எதிர்ப்புகளை சந்திக்கிறார். ஒரு சாதாரண பெண் வழக்கறிஞராக தனது ஆற்றாமையையும், அழுகையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வலி வேதனை துயரம் அன்பு என அத்தனை உணர்வுகளையும் தனது நடிப்பில் அந்தந்த சூழ்நிலைகளில் சரியாக வழிப்படுத்தி எப்போதுமே தான் ஒரு மாபெரும் நடிகை என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார்.

பாக்யராஜ் பிரதாப்போத்தன் பார்த்திபன் பாண்டியராஜன் தியாகராஜன் என்ற ஐந்து இயக்குனர்களும் சரிவிகித முறையில் தங்களது நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இப்படி அந்த ஐந்து இயக்குனர்களையும் சரியான முறையில் கையாண்டு அதற்கு படத்தின் இயக்குனர் ஜே.ஜெ.ப்ஃரெட்ரிக் அவர்களுக்கு நாம் பாராட்டைத் தெரிவிக்கலாம்.

படத்திற்கு கோவிந்த் வசந்தா அவர்கள் இசையமைத்துள்ளார். இசையிலும் பின்னணி இசையிலும் மனதில் நிற்கிறார். படத்திற்கு பலமாய் இருக்கிறார்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் ராம்ஜி முத்திரை பதித்திருக்கிறார். படத்திற்கு எடிட்டிங் செய்திருக்கும் ரூபன் அவர்களுக்கு அப்ளாஸ் கொடுக்கலாம். மனிதர் பிரமாதமாக வேலை செய்திருக்கிறார்.

பெண் குழந்தைகளை இப்படித் தான் வளர்க்க வேண்டும் என்று ஒரு கருத்தியல் பண்டைய காலம் தொட்டு இருந்து கொண்டே இருக்கிறது. அதில் ஆடையை மட்டுமே முன்னிறுத்தி சொல்லப்பட்டு வந்த வரிசையில், பெண் ஆண் குழந்தைகளின் எண்ண ஓட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி புது இலக்கணத்தை வகுத்து கொடுத்து இருக்கிறார்கள் இந்த பொன்மகள்வந்தாள் படக்குழுவினர்.

கண்டிப்பாக இன்றைய சமூகத்திற்கு இந்த படம் அத்தியாவசியமான ஒன்று. எல்லோருமே ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்து தான் வளர்ந்திருக்கிறோம். எனவே அனைத்து தரப்பு மக்களும் கட்டாயம் இந்த படத்தை பார்க்கலாம்.
இந்த படத்திற்கு தி மூவிஸ் ஆப் இந்தியா – தமிழ் அளிக்கும் ரேட்டிங். 4/5.