திமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வரும் துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் – தி மூவிஸ் ஆப் இந்தியா
இந்தியாவில் இயங்கக்கூடிய அரசியல் கட்சிகளில் கட்சிப் பெயரை சொன்னவுடன் நாடே அறிந்து கொள்ளக்கூடிய அளவில் இருக்கக்கூடிய கட்சிகள் வெகு சிலவே.
அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு கட்சி திராவிட முன்னேற்ற கழகம். அந்தக் கட்சியின் தற்போதைய முக்கிய பொறுப்புகளில் ஒன்றில் அமர இருப்பவர்தான் திரு. துரைமுருகன் அவர்கள்.
இன்றைய திமுகவில் இருக்கும் மூத்த முன்னோடிகளில் முதன்மையானவர் துரைமுருகன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செல்லப்பிள்ளை.

இவற்றைத் தாண்டி துரைமுருகன் அவர்களுக்கு ஒரு வரலாறு உண்டு.
அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு கொள்கை பார்த்து ஒரு போராளியாக 1953-ம் ஆண்டு திமுக இயக்கத்திற்கு வந்தவர் துரைமுருகன்.
துரைமுருகன் தன் உள்ளத்தில் கல்வெட்டாய் கொண்டிருக்கும் வார்த்தை என்னவென்றால், “தான் இதுவரை பெற்ற பதவிகள் தனக்கு கிடைக்காமல் போயிருந்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இரு வண்ண கொடியைப் பிடித்துக்கொண்டு கழகத்திற்காக கோஷமிட்டு கொண்டே இருப்பவன். ஆபாசங்களுக்கு அப்பாற்பட்டவன்”.

எம்ஜிஆர் அவர்கள் திமுகவில் இருந்து வெளியேற நேரிட்ட காலத்தில், கட்சியின் முக்கிய பிரமுகர்களும் உறுப்பினர்களும் எம்ஜிஆர் அவர்களோடு சேர்ந்து வெளியேறினர்.
ஆனால் துரைமுருகன் அவர்களோ தாம் கொண்டதும் கண்டதும் ஆன தலைவராக அண்ணாவையும் கருணாநிதியையும் ஏற்றுக்கொண்டு திமுக விலேயே நிரந்தரமாக கட்சிப் பணியாற்றினார்.

தம்மை ஆளாக்கிய எம்ஜிஆர் அவரிடமிருந்து அழைப்பு வந்தபோது கூட அதை மறுத்து கருணாநிதியோடு பற்று கொண்டு உடனிருந்து கட்சிக்கும் கருணாநிதி அவர்களுக்கும் பக்கபலமாக இருந்து வந்தவர்.
சட்டசபையில் எம்ஜிஆர் அவர்களை எதிர்த்து சிம்ம குரல் கொடுத்தவர்களில் துரைமுருகன் முக்கியமானவர்.
ஒருகட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தான் என்ற வார்த்தைக்கு சொந்தமானவர்.
11 சட்டசபை தேர்தல்களில் இரண்டில் மட்டுமே தோல்வியைத் தழுவியவர். கருணாநிதி அவர்களின் மனசாட்சியாக வாழ்ந்து வந்தவர்.

எதிர்க்கட்சிகளின் எப்பேர்பட்ட வாதத்திற்கும் நக்கலும் கிண்டலுமாக பதில் சொல்லியே பதட்டத்தையும், எதிர்க்கட்சிகளின் வீரியமான ஆயுதத்தையும் வலுவிழக்கச் செய்பவர்.
அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதி அவர்களும் கொண்ட தமிழ் பேச்சாற்றலுக்கு சற்று வித்தியாச பட்டவர் துரைமுருகன் அவர்கள்.
நையாண்டியாக பேசுவது போல் இருக்கும் ஆனால் அதற்குள் நிறைய பொருள் ஒளிந்திருக்கும். காகிதத்தில் எழுதி வைக்காமல் மற்றும் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் நதிநீர்ப் பிரச்சினை உள்பட பல பிரச்சினைகள் பற்றி துரைமுருகன் அவர்கள் பேசுவதை கேட்க கேட்க தெவிட்டாது.

தனது பரம எதிரி கட்சியான அதிமுகவைச் சேர்ந்த எம்ஜிஆர் ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளை எதிர்த்து கலைஞருக்கு நிகராக வாதம் செய்தவர்.
ஸ்டாலின் அவர்களிடமிருந்து திமுகவின் பொருளாளர் பதவியை 2018ல் பெற்றார் துரைமுருகன் அவர்கள். பேராசிரியரின் மறைவுக்குப் பிறகு பொது செயலாளர் பதவியை துரைமுருகன் தான் ஏற்பார் என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டது.
அதற்கேற்ப தனது பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்திருந்தார். கொரோனா பரவல் காரணமாக பொதுச்செயலாளர் பதவியையோ அல்லது வேறு பதவியையோ ஏற்காமல் இருந்து வந்த துரைமுருகன் அவர்கள் மௌனம் காத்து வந்தார்.

இதனால் துரைமுருகன் அவர்கள் கட்சி மாறுகிறார் அல்லது பதவி இல்லாமல் வருத்தத்தில் இருக்கிறார் என்ற எதிர்க்கட்சிகளின் வதந்திகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது.
இவற்றையெல்லாம் தாண்டி ஒரு சாதாரண தொண்டனாக கட்சியில் நுழைந்து இன்று, திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் அவர்களுக்கு உற்ற துணையாகவும், கட்சிக்கு மிக்க பலமாகவும் உருவெடுத்திருக்கும் துரைமுருகன் அவர்களுக்கு திமுக மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.
திமுகவின் நாலாவது பொதுச்செயலாளராக போட்டியின்றி ஒருமனதாக பொறுப்பேற்க உள்ளார் துரைமுருகன் அவர்கள்.

பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் என முதுபெரும் தலைவர்கள் அமர்ந்த பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்கிறார் துரைமுருகன்.
துரைமுருகன் அமர்கின்ற இன்றைய காலகட்டம் சாமானியமானது அல்ல. ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் இருந்த அரசியல் களம் வேறு 2020இல் இருக்கும் அரசியல் களம் வேறு.
சுருக்கமாக சொன்னால் அது அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் காலம், இது இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலம். இரண்டுக்கும் இடையே எழுபது ஆண்டுகள் வித்தியாசம் இருக்கிறது.

இந்த மிகப்பெரிய காலமாற்றத்தை அறியாதவர் அல்ல துரைமுருகன் அவர்கள். கையில் வரைந்து சுவரொட்டிகள் ஒட்டிய காலத்தையும், இன்றைய டிஜிட்டல் போஸ்டர் காலத்தையும் கரைத்துக் குடித்தவர் தான் துரைமுருகன்.
பொதுச் செயலாளராக பொறுப்பேற்க இருக்கும் துரைமுருகன் அவர்கள் திமுகவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வார் என்று நம்பலாம்.

அத்தகைய மாபெரும் பொறுப்பை ஏற்கவிருக்கும் துரைமுருகன் அவர்களுக்கு, தி மூவிஸ் ஆப் இந்தியா இணையதளம் தனது லட்சக்கணக்கான ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.